திருப்பங்கள் தரும் திருவோண விரதம்
ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் இருக்கின்ற நிலையில், இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பு பெயரான திரு எனும் அடைமொழியை பெற்று இருக்கிறது. சிவனை குறிக்கும் திருவாதிரை நட்சத்திரமும், திருமாலை குறிக்கும் திருவோணம் நட்சத்திரமும் ஆகும். இதில், திருவோண நட்சத்திரம் பெருமாளுக்குரியது என்பதால் 12 மாதத்தில் வரும் திருவோணம் நட்சத்திர தினத்தன்று வைஷ்ணவர்கள் விரதம் இருப்பது வழக்கம். அதையடுத்து, ஆவணி மாதம் வருகிற திருவோண தினமே திருவோண விழாவாக கொண்டாடப்படுகிறது. இத்தகைய திருவோண விழா எங்கு சிறப்பாக நடைபெறுகிறது? அதன் வரலாறு என்ன? எவ்வாறு விரதம் இருப்பது? அதனால் கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.
சிங்க மாதம்
தமிழ் மாதமான ஆவணி, கேரளாவில் ‘சிங்க மாதம்’ என்று அழைக்கப்படுவதுடன், சிங்க மாதமே அங்கு ஆண்டின் தொடக்கமாக கருதப்படுகிறது.
சிங்க மாதத்தில் வருகின்ற திருவோண நட்சத்திரத்தில் ‘ஓணம் பண்டிகை’ கொண்டாடப்படுகிறது.
மகாவிஷ்ணு மூன்றடி மண் கேட்பதற்காக வாமன அவதாரம் எடுத்தது திருவோணம் நட்சத்திரத் தினத்தன்று தான் என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.
வரலாறு
திருமறைக்காடு என்னும் வேதாரண்யத்தில் உள்ள வேதாரண்யேஸ்வரர் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்கு அணையப்போகும் நேரத்தில், அதில் இருந்த நெய்யைக் குடிக்க வந்த எலியின் மூக்கால், விளக்கு திரி தூண்டப்பட்டு பிரகாசமாக எரியத் தொடங்கியது.
விளக்கு அணையாமல் இருக்கச் செய்த எலியை, அடுத்தப் பிறவியில் அரசனாகப் பிறக்கும்படி, சிவன் அருள்புரிந்தார்.
சிவபெருமானின் அருளைப் பெற்ற எலி, மறு பிறவியில் அசுர குலத்தில் ‘பலி’ என்ற பெயரில் மன்னராகி, கேரளாவை ஆட்சி செய்தார்.
பலியின் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். தனது ஆற்றலால், தேவர்களையும் பலி தோற்கடித்ததால் மகாபலி சக்கரவர்த்தி என்று பெயர்பெற்றார்.
அவர் அஸ்வமேத யாகம் செய்ய முயன்றபோது, தேவர்களின் நலன் கருதி வாமனராக வந்த திருமால், மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு அவரை ஆட்கொண்டார்.
மகாபலியை, வாமனர் ஆட்கொண்ட தினம் ஆவணி மாதம் திருவோணம் ஆகும். இந்நாளில் பாதாள லோகத்தில் இருந்து கேரளாவுக்கு பலி வருவதாக ஐதீகம்.
அதையொட்டி, மகாபலி சக்கரவர்த்தியை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கேரளாவில் ஓணம் திருநாள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழகத்தில்
மார்க்கண்டேய மகரிஷியின் மகளாக அவதரித்த பூமா தேவியை, ஒப்பிலியப்பர் பெண் கேட்டு வந்தது, பங்குனி மாத திருவோண நட்சத்திரமாகும்.
பூமா தேவியை, ஒப்பிலியப்பர் மணந்து கொண்டது, ஐப்பசி மாத திருவோண நட்சத்திரமாகும்.
அதையடுத்து, கும்பகோணத்தில் உள்ள ஒப்பிலியப்பர் கோயிலிலும் இந்த திருவோண விழா சிறப்பாக நடைபெறுகிறது.
திருவோண விரதம்
திருவோண நட்சத்திரத்திற்கு முந்தைய நாள் இரவே உணவேதும் உண்ணாமல் விரதத்தை தொடங்க வேண்டும். அன்று இரவில் பெருமாள் மந்திரங்களை உச்சரிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் கொடுக்கும்.
மறுநாள் அதிகாலையில் எழுந்து சுத்தமாக நீராடி நல்ல உடை உடுத்திக் கொண்டு பெருமாள் கோயிலுக்கு சென்று துளசி மாலை சாற்றி வழிபடலாம்.
கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே பூஜை அறையில் பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி விளக்கேற்றி வழிபட வேண்டும்.
பூஜையில் துளசி தீர்த்தம் வைத்து தீர்த்தத்தை பருகலாம். மதியம் எடுத்துக் கொள்ளும் உணவில் உப்பு சேர்க்கக்கூடாது. உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டால் ஒப்பிலியப்பன் பெருமானின் அருளாசி பரிபூரணமாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.
மாலையில் நெய்விளக்கு ஏற்றி பெருமாளுக்கு மந்திரங்களை உச்சரித்து பூஜை செய்யுங்கள். இரவில் பால் மற்றும் பழம் போன்றவற்றை எடுத்துக் கொண்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
பலன்கள்
திருவோண விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் வாழ்வில் கஷ்டங்கள் நீங்கி, திருப்பங்கள் ஏற்பட்டு செல்வச்செழிப்பு கிடைக்கும். நீங்காத செல்வம் நிலைத்து நிற்கும்.
மனக்குறைகள் அகன்று சந்தோஷ வாழ்வு கிடைக்கும்.
பெண்கள் விரும்பியதை அடைவர்.
திருமணம் தாமதமாகி வந்தவர்களுக்கு விரைவில் வரன் அமையும்.
நீண்ட காலம் குழந்தை இல்லாதவர்கள் குறை நீங்கி குழந்தைப்பேறு கிடைக்கும்.
திருவோண விரதம் இருப்பவர்கள், எல்லா வளங்களும் பெற்று, இறுதியில் வைகுந்தப் பதவியை அடைவார்கள்.